Total Pageviews

Friday, 23 November 2012

பல் போச்சே ........
தென் தமிழகத்தின் கோடியில் உள்ள பொதிகை மலை பல அதிசியங்களையும் ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தென்காசிக்கு அருகில் உள்ள குற்றாலத்திலிருந்து, மணிமுத்தாறு பாபனாசம் மற்றும் காரையாறு அதற்கும் மேலே அகஸ்த்தியர் அருவி மற்றும் பாணதீர்த்தம் போன்ற இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் அமைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம்-வள்ளியூர் பாதையில் அமைந்துள்ளது களக்காடு என்னும் சிற்றூர்.அங்குள்ள மலை அரிய பல மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மலையில் 5கி.மீ. தொலைவில் கற்கண்டாக இனிக்கும் அருவியும் அருகில் பல ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலும் உள்ளது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய்ய மண்டபமும் உள்ளது. அருவிக்கரை எங்கும் அழகிய பலவண்ண பூச்செடிகளும் கண்களைக் கவரும். பெருமாள் கோவிலுக்கு தினமும் அடிவாரத்தில் உள்ள ஊரில் இருந்து ஒரு அர்ச்சகர் காலையில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிவிடுவார். பெருமாள்சிலை சுமார் 6அடி உயரம் கம்பீரமாக இருக்கும். மலையில் கரடுமுரடான பாதையை நடந்து தான் கடக்கவேண்டும்.வழி நெடுகிலும் பெரிய பெரிய காட்டு மரங்களும் மரங்களில் அரியவகை சிங்கவால் குரங்குகளும் உள்ளன.
திருமணத்திற்கு முன் என் கணவர் அவர் நண்பர்களுடன் (சுமார் 25 நபர்கள்) மற்றும் சமையல் பொருட்கள் சமையல் காரருடன் வருடம் ஒரு முறை அங்கு வெளிஉலக தொடர்பு ஏதுமின்றி ( 1969-அப்போது கைபேசியும் கிடையாது) மூன்று தினங்களை இயற்கையுடன் ஒன்றி ரம்மியமாக கழித்தும் அருவியில் நீராடி மகிழ்ந்ததையும், ஒரு முறை அவர் நண்பர் ஒருவர்க்கு அருவியில் ஏற்பட்ட அனுபவத்தையும் கூறினார். "அருவி, கரையிலிருந்து 15அடி தொலைவில் ஆழமான தடாகத்தில் உள்ளது.அருவிக்கு கீழே அமர்ந்து குளிக்க ஒரு பெரிய பாறை உள்ளது. தண்னீர் பளிங்குபோல் தெளிவாகவும், கற்கண்டு போல் சுவையாகவும் இருக்கும். . மண்டபம்,கோவில் எங்கேயும் மின்வசதி கிடையாது. இரவில் " பெட்றமாக்ஸ்" உதவியில் சமையல் நடைபெறும். அனைவரும் மண்டபத்தில் படுத்துக்கொள்ள, இருவர் மட்டும் வெளியில் மரச்சுள்ளிகளை எரியவிட்டு, காட்டுவிலங்குகள் அருகே வராமல் காவல் இருப்பார்கள்.
பாறையில் அமர்ந்து சிலரும் கரையில் சிலரும் அருவித்தண்ணீரில் நீராடிக்கொண்டு இருக்கும் போது ஒரு நண்பர் அருவியில் நீரோடு வந்த சிறிய இலையுடன் கூடிய குச்சியை பல் தேய்க்க வசதியாக உடைத்து, பல் தேய்த்திருக்கிறார். சிறிது நேரம் தேய்த்துவிட்டு குச்சியை அருவியில் வீசிவிட்டு அனைவருடன் அருவியில் குளித்துக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரம் கழித்து வாய் உணர்ச்சி இல்லாமல் மரத்துவிட்டது போல இருக்கிறது என்று சொல்லி வாய் நிறைய நீரால் கொப்பளிக்கும் போது அத்தனை பற்களும் அருவியில் கொட்டிவிட்டது! அதில் இரண்டு பற்களை ஏற்கனவே எடுக்கவேண்டும் என கூறிக்கொண்டிருந்தார்.அதுவும் சேர்ந்து அருவியோடு போய்விட்டது! அவர் பல் தேய்த்த குச்சியை அருவியில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை ஆம்! தென் தமிழகத்தின் பொதிகை மலைத்தொடர் அரிய பலமூலிகைகளையும் அதிசியங்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

No comments:

Post a Comment